நாடாளுமன்ற  தேர்தல் பணிக்கான ஏற்பாடுகள், நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு, தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவைக் குறித்து  அறிவாலயத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளோடும் அமைச்சர்கள் உதயநிதி, நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்

மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட  இந்த கூட்டத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் உங்கள் குறைகளைச் சொல்லுங்கள் என்று அமைச்சர் உதயநிதி  கேட்டுக்கொண்டார்

ஜனவரி 29 ஆம் தேதி நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில்,  திமுக நிர்வாகிகள் தங்கள் உள்ளத்தில் உள்ளதைக் கூறி அமைச்சர் உதயநிதியை அதிர வைத்திருக்கிறார்கள்.

கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர்  உள்ளாட்சிப் பிரநிதிதிகளை ரொம்ப மோசமா நடத்துவதாகவும்  ஆறாயிரம் நிவாரணம் கொடுக்கும்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போனா,’இதெல்லாம் அதிகாரிகள் வேலை. நீங்க ஏன் வர்றீங்க?’னு கேட்குறார்’ என்று புகார் கூறினர் .

பிடிஓ உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மீதும் கடுமையாக புகார் கூறியிருக்கிறார்கள். அதிகாரிகள் தான் ஆட்சியை  நடத்துவதாகவும் கட்சிக்காரர்கள் நியாயமான விஷயத்தை கூட செய்ய முடியவில்லை  எனவும் அமைச்சர் உதயநிதியிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து ஒரு நிர்வாகி எழுந்து, ‘‘அமைச்சர்கள்ட்ட சொல்லுங்க… ஒன்றிய செயலாளர்கள் நாங்க ஏதாச்சும் கட்சிக்காரனுக்காக கேட்டா செஞ்சு தர சொல்லுங்க.. கட்சிக்காரங்களுக்கு செஞ்சாதானே அவங்க தேர்தல் வேலை பாப்பாங்க…?” என்று கேட்டிருக்கிறார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியின் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் எவ்வளவு அதிருப்தியை சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து அமைச்சர் உதயநிதி அதிர்ந்து போயிருக்கிறார்