Pune Porsche Accident காவல் துறையின் அறிக்கையின்படி, 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு போர்ஷே ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர்
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து இரண்டு பேரைக் கொன்ற கார் விபத்தில் சிக்கிய 17 வயது சிறுவனின் தந்தை புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய பார்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. போலீஸ் அறிக்கைகளின்படி, 17 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற சொகுசு போர்ஷே (Porsche), மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா உடனடியாக உயிரிழந்தனர் (Pune Porsche Accident).
சிசிடிவியில் பதிவான இந்த விபத்து, குறுகிய பாதையில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் கார் பயணித்தது தெரியவந்தது.
இந்த வழக்கு தற்போது புனே (Pune) காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. செஷன்ஸ் நீதிமன்றத்தின் முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில், புனே போலீஸார் சிறுவனின் தந்தை மீது சிறார் நீதிச் சட்டம் 75 மற்றும் 77 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் பிரிவுகள், ஒரு குழந்தையை வேண்டுமென்றே புறக்கணிப்பது மற்றும் மைனருக்கு போதைப் பொருட்களை வழங்குவது ஆகியவை தொடர்பானவை.
ஐடி இன்ஜினியர்களான அனீஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்டா மோட்டார் பைக்கில் அதிகாலை 2:15 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது , வேகமாக வந்த போர்ஷே அவர்களின் பைக்கின் பின்னால் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமாரின் கூற்றுப்படி, காரை ஒட்டி வந்த மைனர் தனது 12 ஆம் வகுப்பு முடிவுகளை உள்ளூர் பப்பில் கொண்டாடிக் கொண்டிருந்தார், அங்கு அவர் விபத்துக்கு முன் மது அருந்துவதைக் CCTVயில் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 25 ஆக உள்ளது, இதனால் அவருக்கு மது சப்ளை செய்தது சட்ட விரோதமானது. இதனால், சிறுவனுக்கு மது வழங்கிய குற்றச்சாட்டை பார் உரிமையாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
முன்னதாக சிறார் நீதி வாரியம் சிறுவனை காவலில் வைக்கப்பட்ட 15 மணிநேரத்திற்குப் பிறகு ஜாமீன் வழங்கியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
ஜாமீன் தீர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக, புனே போலீசார் சிறார்களை வயது வந்தவராக விசாரிக்க செஷன்ஸ் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். “நேற்று நடந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டோம். ஐபிசி 304 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம், இது ஒரு கொடூரமான குற்றம் என்பதால் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகும்” என்று கமிஷனர் குமார் கூறினார்.
மேலும், சிறுவன் மது அருந்திய மதுக்கடை மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.