முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. தற்போது அரசியலில் இருந்து விலகி உள்ளார். மு.க.அழகிரியின் மகனின் பெயர் துரை தயாநிதி. அவர் ஒரு தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்
இந்நிலையில்தான் துரை தயாநிதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது, கடந்த டிசம்பர் 6ஆம் தேதி துரை தயாநிதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் அடைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அடைப்பை சரிசெய்ய சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு துரை தயாநிதியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குணமடைந்து வருகிறார். இதனிடையே, கடந்த 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின், துரை தயாநிதியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வேலூர் மக்களவை வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத் ரட்சகன் ஆகியோரை ஆதரித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் சென்றார். அப்போது ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், தற்போது துரை தயாநிதிக்கு வேலூர் மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று 55வது நாளாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலின் இன்று வேலூர் சென்று மருத்துவமனையில் துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
துரை தயாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். சிகிச்சை முறைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் டாக்டர்கள் விளக்கினர். முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது சகோதரர் மு.க.அழகிரிக்கும் இடையே பகை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பொது இடங்களில் அதிகம் பேசுவதில்லை.
ஆனால் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அப்படியல்ல. அவர் தனது சித்தப்பா மு.க.ஸ்டாலின், அண்ணன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருகிறார். துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கடந்த மார்ச் 14ம் தேதி காலை வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து துரை தயாநிதிக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.