Lok Sabha Election 2024: அரியலூர் (Ariyalur) மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் (VCK) மற்றும் பாஜக (BJP) நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவரின் மண்டை உடைந்த நிலையில் பதற்றம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரியில் (Pondicherry) உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் (Tamil Nadu Election 2024) நடைபெற்றது.
இந்நிலையில் அரியலூர் (Ariyalur) மாவட்டம் ஜெயம்கொண்டம் (Jeyamgondan) அருகே நரசிங்கபாளையம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். மதிய வேளையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பள்ளியின் வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் (VCK) கட்சியின் நிர்வாகிகள் கூட்டமாக நின்று வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பாஜக (BJP) கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் (VCK) கட்சியினர் மீது அவர்கள் அங்குள்ள போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் இருகட்சியினரையும் வாக்குச்சாவடி மையத்தின் வளாகத்தில் இருந்து வெளியேறும்படி கூறியுள்ளனர்.
இதனால் விடுதலை சிறுத்தைகள் (VCK) கட்சியினருக்கும், பாஜக (BJP) வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இந்த வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. அப்போது விடுதலை சிறுத்தைகள் (VCK) கட்சியின் நிர்வாகி செல்வக்குமார் மற்றும் பாஜக (BJP) நிர்வாகி அருண் ஆகியோர் கட்டையை எடுத்து மாற்றி மாற்றி தாக்கியுள்ளனர்.
இதனால் செல்வக்குமார் மற்றும் அருண் ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் மண்டை உடைந்த 2 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் நரசிங்கபாளையம் வாக்குச்சாவடியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அரியலூர் (Ariyalur) எஸ்பி சண்முக ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இருப்பினும் பதற்றம் தணியவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்பிறகு ஓட்டுப்பதிவு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சம்பவம் நரசிங்கபாளையம் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.